அவள் ஒரு தேவதை-2

அவள் ஒரு தேவதை
எபிசோட்-2
அவள் ஒரு தேவதை!
கற்றை முடி காற்றில் பறக்க,
முகப்பரப்பில் எண்ணெய் வழிய,
வேலையினால் வியர்வை வழிய,
சகதியினில் பாதம் பதிய,
வயல் வெளியில் களை எடுக்கும்,
அவளும் ஒரு தேவதைதான். 

நேற்று இரவு மணி  ஒன்பதரை…..

சிவா ஃபுல் மப்பில் இருந்தான்…. அருகே கார்த்திக் ஒரு மெரின்டா கேனோடு சிவாவிற்கு கம்பெனி கொடுத்துக் கொண்டிருந்தான்….

ஏற்கெனவே மூன்று ரவுண்டு முடிந்திருந்தது….. நாளாவதாக ஒரு பெக்கை ஊத்தி தொண்டையில் சரித்துக் கொண்டு ஊருகாயை எடுத்து நாக்கில் தொட்டுக் கொண்டே ஆரம்பித்தான் சிவா….

“ம….ம்மச்சி.. நீ ரொம்ப கொடுத்து வச்சவன்டா…” போதை ஏறிய குரலில்…
“ஏன்….?” என்றான் கார்த்திக்

“ச்சி…சித்ரா… ம்மச்சி… ரம்ப… ..நொல்ல…. பண்ணு….. மாப்ள…” என போதையில் வார்த்தைகள் வராமல் உளறிக் கொட்டினான்…

“என்னடா… சொல்ற ஒரு எழவும் புரியல….கொஞ்சம் புரியிற மாதிரி சொல்றியா…….”

“பு..புரியிற மாதிரி…..ம்ம்… புரியிற மாதிரி…. சொல்றேன் ம்மச்சி….. அவ… அவ… ரொம்ம்ம்ப… நல்ல்ல… பொண்ணு மாப்ள…. பாவம் அவ….நா.. நான்… நொல்லா… திட்டி….அனுப்பிச்சிட்டேன்…..”என போதையில் தன் மனதில் உள்ளதை கொட்ட ஆரம்பித்தான்…

“என்னடா… சொல்ற… ஏன் அவளை திட்டி அனுப்பிச்ச….”  நெற்றியில் கோடுகள் விழ கேட்டான் கார்த்திக்

“அவ….அவ…. எ…. என்னை…… ப்போயி…..ல்.. லவ் பன்றேன்னு… சொல்றா…. மாப்ள…” சிவா குழறலோடு சொல்ல கார்த்திக் உட்சபட்ச அதிர்ச்சிக்கு உள்ளானான்….

எதுவும் சொல்லாதவனாக….. சிவா சொல்வதை அதிர்ச்சி அப்பிய முகத்தோடு கேட்க ஆரம்பித்தான்…

“எ….எனக்கும்… அவள… ரொம்ம்ம்ப…… புடிக்கும்…. மாப்ள….. ஆனால்……ந…நான்…. அவளுக்கு…. வேணாம்…. என்னை கட்டிக்கிட்டா…… அவ கஷ்டப்படுவா…. நீ… நீதான் மாப்ள… அ…அவளை சந்தோசமா பார்த்துக்கனும்…..” என்ன சொல்கிறோம் என்பதை அறியாமலேயே உளறிக் கொட்டிக் கொண்டிருந்தான் சிவா…

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட கார்த்திக்….. நெற்றியை கீறிக் கொண்டான்….

என்ன சொல்கிறான் இவன்… சித்ரா இவனை லவ் பன்றாளா…. அவளோட அமைதிக்குக் காரணம் இவன்தானா…?

இத்தனை நடந்திருக்கிறது….. இனியும் என்னால் சித்ராவை மணம் முடித்துக் கொண்டு என் வாழ்கையை பணயம் வைக்க முடியாது… நாளை நான்கு பேரின் திருப்திக்காக தெரிந்தும் அந்த புதைக்குழியில் விழ நான் தயாரில்…. இதற்கு வேறு விதமாகத்தான் முடிவு செய்ய வேண்டும்…என நினைத்தவன்… இனி என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தான்

எனக்கு கல்யாணம் வேண்டாம் என்றால் விடவும் மாட்டார்கள்…. எங்கேயாவது ஓடிவிடலாமா…? ஊஹூம்…. அதுவும் சரி வராது…. சிவா,சித்ராவின் காதலுக்கும் ஒரு முடிவு வேண்டும்….. எல்லாவற்றையும் சேர்த்து வைத்து யோசித்து… ஒரு முடிவுக்கு வந்திருந்தான்… நாளை நடக்கப் போவதை இன்றே தீர்மானித்தான்….

நேரம் ஆனதும் அனைவரும் சென்றுவிட…. கார்த்திக் சிவாவை காரில் ஏற்றி கொண்டு போய் அவனது வீட்டில் விட்டான்…

“மச்சி… காலைல மண்டபத்துக்கு சீக்கிறம் வந்திடுடா… வரலைனா… நான் வந்து தூக்கிட்டுத்தான் போவேன்….” மன இருக்கத்தோடு கார்த்திக் சொல்ல

“அது எப்படி மாப்ள…. நான் இல்லாம உன் கல்யாணம் நடந்திடுமா….?” போதை குரலில் தள்ளாடியவாறு சொல்லிவிட்டு உள்ளே சென்றான்….

காலை மணி ஆறரை……

கார்த்திக்கும் மாணிக்கமும் தனது வீட்டு வேலையாட்களுடன்  மண்டபத்திற்கு… வந்து சேர்ந்திருக்க, கார்த்திக் போனை எடுத்து சிவாவை அவசரமாக வருமாறு அழைக்க…

அடுத்த அரை மணி நேரத்தில் சிவா தனது அப்பா அம்மாவோடு வந்து சேர்ந்திருந்தான்..

“வாங்கம்மா…. வாங்கப்பா..”என கார்த்திக் இருவரையும் பார்த்து சொன்னவன் சிவாவிடம் திரும்பி

“அய்யய்ய…. என்னடா ட்ரெஸ் இது ஃபேன்ட் சட்டையுமா வந்து நிக்கிற… கல்யாண மாப்ள இப்படியா வர்றது…..” கார்த்திக் நேரடியாக சொல்ல…

“என்ன மச்சான்…. சொல்ற….” சிவாவின் மனம் ஒரு நிமிடம் ‘அந்த கல்யாண மாப்ள’ என்ற வார்த்தையில்  குளிர்ந்து போனது…

“அதுவந்து…. கல்யாண துணை மாப்ள… இப்படியா ட்ரெஸ் போட்டுட்டு வருவ…. இந்தா போய் இந்த வேஷ்டி சட்டைய போட்டுகிட்டு வா…” 
கார்த்திக் கொடுத்த பார்சலை வாங்கிக்கொண்டவன்….

“எங்கே வச்சுடா ட்ரெஸ் மாத்துறது…” சிவா கேட்க, கார்த்திக் சிவாவின் அப்பாவிடம் திரும்பி

“சரிப்பா.. நீங்க அம்மாவோடு போய் உள்ள உட்காருங்க…. நான் இவனோடு போயிட்டு ஒரு பத்து நிமிசத்துல வந்திடுறேன்… எனச் சொல்லவும் சிவாவின் அப்பாவும் அம்மாவும் உள்ளே சென்று அமர்ந்து கொள்ள

நீ என்னோடு வா என்றுவிட்டு முன்னே நடக்க சிவாவும் பின்னே நடந்தான்…

மணமகன் அறையை அடைந்த கார்த்திக்…. எதிரே சித்ரா வர… அதைக் கண்டவன் அப்படியே நிற்க…. சிவாவும் கார்த்திக்கின் பின்னே நிற்க…
அவர்களை கடந்து சென்ற சித்ராவின் கண்கள்… கார்த்திக்கை பார்க்கவில்லை…. சிவாவையே ஏக்கமாக பார்த்தது…..  அவள் தன்னை பார்க்கிறாள் என அறிந்த சிவா… முகத்தை வெடுக்கென திருப்பிக் கொண்டான்…

ஏக்கமாக பார்த்த சித்ராவின் கண்கள் கலங்கியது….. ஒரு துளி நீர்… கண்ணில் கோர்த்து வெளியே எட்டிப் பார்க்க அதை வேகமாக துடைத்துக் கொண்டவள்….. அறைக்குள் புகுந்து கொண்டாள்…. கார்த்திக் பார்த்திருப்பானோ என்றெல்லாம் அவள் கவலைப்படதாக தெரியவில்லை…

கார்த்திக் சித்ராவை நன்றாக கவனித்தான்… அவளது கண்களில் இருந்த, காதலை… ஏக்கத்தை…. யாசிப்பை அறிந்து கொண்டான்.. 
தாம் எடுத்த முடிவு, அடுத்து செய்யப் போகிற காரியம் எல்லாம் மூன்றுபேரின் வாழ்கையும் காப்பாற்றுவதற்கே.. என நினைத்துக் கொண்டவன்…. மணமகன் அறைக்குள் செல்ல…. பின்னாலேயே சிவாவும்  சென்றான்….

“நீ மனசை மாத்திக்கோ…. மச்சி….” கார்த்திக் சொல்ல…
“என்னது….?” பதறினான் சிவா… எங்கே கார்த்திக்கிற்கு தெரிந்துவிட்டதோ என்று….

“ட்ரெஸை மாத்திக்கோடான்னு சொன்னேன்…” கூலாக சொன்னான் கார்த்திக்… சிவா அவனின் கண்களை கூர்மையாக பார்த்தான்

“சரி மாப்ள…. நீ வெளியே இரு ” என்ற சிவாவின் குரலில் உயிர் இல்லை….

“எதுக்கு மச்சி… நீ என்ன பொம்பளையா… என்னை வெளியே போகச் சொல்ற….” என்பவனிடம் சிவா பதில் சொல்லும் முன்
கார்த்திக்கின் போன் ஒலிக்க…. எடுத்து காதில் வைத்தவாறு வெளியேறினான்…

அறையின் கதவை சாத்திவிட்டு வந்த சிவாவினால்….. தன் மன உணர்வுகளை கட்டுப் படுத்த முடியவில்லை….

சேரில் பொத்தென்று அமர்ந்தவன்……  முகத்தை மூடிக் கொண்டு ஓவென… அழ ஆரம்பித்திருந்தான்….. அதே சமயம் அடுத்த அறையில் தோழிகளின் மத்தியில் சித்ரா கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள்…..
ஒரு ஐந்து நிமிடம் முடிந்த நிலையில்…. சிவா அவ்வாறே அழுது கொண்டிருக்க…

அப்பொழுது அறையின் கதவு தட்டப் பட்டது…. “மச்சி…. என்னடா பன்ற… டைம் ஆச்சு… வேகமா கதவைத் திற….”என கார்த்திக்கின் குரலும் ஒலித்தது…

சிவா தன்னை கஷ்டப்பட்டு நிலைபடுத்தி…. “இதோ ஒரு நிமிசம் மாப்ள…. வந்திடுறேன்” சொல்லிவிட்டு  அவசரமாக எழுந்தவன்… அவசர அவசரமாக தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு வேகமாக உடையை மாற்றிக் கொண்டான்…. அவசர அவசரமாக ஒரு முடிவுக்கும் வந்தான்…

“இனி அழுது எதுவும் நடக்கப் போவதில்லை….. இது நீ எடுத்த முடிவு…. அவளை வேண்டாம் என ஒதுக்கித்தள்ளியது நீ…. இப்பொழுது அழுது என்ன பிரயோஜனம்… இனி நான் அழ மாட்டேன்” என மனதில் உறுதி எடுத்துக் கொண்டவன்… கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான்,இனி நடக்கப் போவதை அறியாமல்.

சிவாவை கண்ட கார்த்திக்… அவன் அழுதிருப்பதை கண்டு கொண்டான் “இன்னும் கொஞ்ச நேரம்தான்…. இந்த அவஸ்தை எல்லாம்…” என எண்ணிக் கொண்டவன் சிவாவை சீண்டிப் பார்க்க நினைத்து…
வேண்டுமென்றே…  “ஹப்பா… இந்த ட்ரெஸ்ல செமையா இருக்கடா…. என்னை விட நீதான் மாப்ள மாதிரி இருக்குற…”

சிவாவின் இதயத்தில் குத்தூசியை வைத்து குத்துவதுமாதிரியான ஒரு வலி.. அதை மறைத்தவனாக

“டேய் டேய்….. புழுவாம போய் கல்யாணத்துக்கு ரெடியாகுடா….”என சகஜமாக்க முயன்றான்….

அதன் பிறகு சிவா.. மண்டபத்தில் ஓடியாடி சிறு சிறு வேலைகள் செய்து கொண்டு இருந்தான்…. அதன் பிறகு நடந்ததெல்லாம் போன அத்தியாயங்களில் முடிந்திருந்தது…

கார்த்திக் தன் சட்டையை பிடித்து சித்ராவின் கழுத்தில் தாலி கட்ட வைப்பான் என கனவிலும் அவன் நினைத்து பார்க்கவில்லை….. நடந்தது உன்மையா இல்லை கனவா.. என்றுகூட அவனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது…. லேசாக தன்னை கிள்ளிப் பார்த்து அது உன்மை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டான்….. இப்பொழுது அவனிடம் என்னமாதிரியான உணர்வுகள் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை….. பலவிதமான உணர்வுகள் கலந்து கட்டி அடித்தது….  இதே நிலைதான் சித்ராவுக்கும்…..

நன்றாக சிந்தித்து பார்த்ததில்…. நேற்றிரவு என்ன நடந்திருக்கும் என்பதை சிவாவால் ஓரளவு கணிக்க முடிந்தது…. அதிர்ச்சியுடன் நிற்கும் அனைவரையும்…. மனதில் ஒருவித நடுக்கத்தோடு பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் சிவா..

அந்த மண்டபம் முழுவதும் ஒரே சல சலப்பு…. யார் யாரோ என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள்…

மாணிக்கம் இடிந்து போய் அமர்ந்தவர்தான் அவருக்கு பேச்சு  என்பது வரவில்லை…..

சிவாவின் அப்பாவும், அம்மாவும் வாய் பிளந்தவர்கள் இன்னும் மூடியபாடில்லை…. நடந்ததை நம்பமுடியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்…

சித்ரா கண்ணீரோடு கார்த்திக்கை கை எடுத்து கும்பிட்டதை வைத்து அவளது மனது ரங்கராஜனுக்கு புரிந்து போனது… எனவே எதுவும் சொல்லாதவராக அமைதியாக நின்று வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்…

ராஜேஸ்வரிதான்  கோபத்தின் உச்சிக்கே சென்றிருந்தாள்…. நேராக கார்த்திக்கிடம் வந்தவள்…. அடப்பாவி இப்படி பன்னி எல்லோரையும் கழுத்தறுத்திட்டியேடா படுபாவி…. ஏன்டா இப்படி பன்ன… உனக்கு எப்படி மனசு வந்துச்சு…. எத்தனை நாளா இந்த திட்டம் போட்டு வச்சிருந்த… ஏன் இப்படி செஞ்ச….. சொல்லுடா… ஏன் அமைதியா நிக்கிற சொல்லுடா…. சொல்லு…….. என தொண்டை கிழிய கத்தினாள் அத்தை….

“அத்தை சும்மா கத்தாதீங்க….. அவ சிவாவைத்தான் லவ் பன்றா… அவளை நான் கட்டிக்கிட்டு நானும் கஷ்டப்பட்டு அவளையும் கஷ்டப்படுத்த என்னால முடியாது…… இது வாழ்க்கை பிரச்சனை அதனாலதான் இப்படி பன்னேன்…. இந்த விசயம் முன்னாடியே தெரிந்திருந்தால்… இப்படி பன்ன வேண்டிய அவசியமும் வந்திருக்காது... ஆனால் நேத்து நைட் தான் எல்லாம்  எனக்கு தெரிய வந்துச்சு…. அதனாலதான் வேற வழியே இல்லாம இப்படி செய்ய வேண்டியதாப் போச்சு….”என நிறுத்தியவன்

“எதுவா இருந்தாலும் உங்க மககிட்டையே பேசிக்கோங்க…. என்னை எதுவும் கேட்காதீங்க…” என கோபமாக சொல்லிவிட்டு அமைதியானான்.

அவனுக்குள்ளும் சித்ராவின் மேல் கோபம் இருந்தது…. அன்று கேட்கும் பொழுதே, இல்லை…. எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை.. நான் சிவாவைத்தான் லவ் பன்றேன் என்று சொல்லிருக்கலாம்…. இப்படி சம்மதித்து அவள் வாழ்கையை கெடுத்துக் கொள்ள நினைத்தது மட்டுமில்லாமல் என் வாழ்கையையும் சேர்த்து கெடுக்க நினைத்துவிட்டாளே…. ஒரு வேளை நேற்றிரவு சிவா குடித்துவிட்டு உளறிக் கொட்டாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என என்னும் பொழுது அவள் மீது கோபம்தான் வந்தது..

நேராக சித்ராவிடம் சென்ற ராஜேஸ்வரி… “ஏன்டி உன்கிட்ட படிச்சு படிச்சு சொன்னேனடி…. இந்த மாதிரி பசங்க கூட பழகாதே, பேசாதேன்னு… எனக்கு அப்பவே சந்தேகம்டி… நீ யாரையோ காதலிக்கிறேன்னு… அதனாலதான் இந்த கல்யாணத்துக்கு அவசரப் பட்டேன்… என் பேச்சையும் மீறி இப்படி பன்னிருக்கியே… உனக்கு எங்க மேல கொஞ்சமாவது மரியாதை இருந்திருந்தால்.. இப்படி பன்னிருப்பியா…..” ராஜேஸ்வரி  தன் மகளிடம் எகிற…

மிரட்சியாக பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றிருந்தவள் பேச ஆரம்பித்தாள்…

“அம்மா… நடந்தது எதுக்கும் நான் பொறுப்பு கிடையாது….. இன்னைக்கு வரைக்கும் நீங்க சொல்றதை கேட்டு இந்த கல்யாணத்துக்கும் சம்மதிச்சு… என் மேல நீங்க வச்சிருந்த நம்பிக்கையை காப்பாதிட்டுத்தான் இருந்தேன்… இப்படி நடக்கும்னு நான் கனவுல கூட நினைச்சு பார்க்கல…

ஆனாலும் நான் கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டேங்கிறதுக்காக என்னோட மனசை என்னால மாத்திக்கிட்டு இருந்திருக்க முடியாது…. நான் கார்த்திக் மாமாவை கட்டிகிட்டு இருந்தாலும்… நான் சிவாவைத்தான் நினைச்சிக்கிட்டு இருந்திருப்பேன்…. காலாம்பூரா… கஷ்டப்பட்டு இருந்திருப்பேன்…”  சித்ராவின் பதிலில் ராஜேஸ்வரி ஆடிப்போனாள்…. தன் மகளையே வெறுப்பாக பார்த்தவள்…. சிவாவிடம் திரும்பினாள்

“ஒரே மக…. இவளை மயக்கி கல்யாணம் பன்னிக்கிட்டா… சொத்தெல்லாம் நம்ம கைக்கு வந்திடும்னு திட்டம் போட்டு அதை முடிச்சிட்டேல்ல…. இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்கோ…. எங்க வீட்ல இருந்து ஒரு பைசா கூட அவளுக்கு கிடைக்காது…..” ராஜேஸ்வரி சிவாவிடம் கடுமையாகச் சொல்ல

“நாங்க ஏழைதான் ஒத்துக்குறேன்… ஆனால் சும்மா வாய்க்கு வந்தபடி பேசாதீங்க….. நான் என்னைக்குமே அப்படி நினைச்சது கிடையாது…. இப்படி எல்லாம் யாரும் எங்களை பேசிடக் கூடாதுன்னுதான்… சித்ரா என்கிட்ட லவ்வ சொல்லும்போதே நான் ஏத்துக்கல..… யாருக்கு வேணும் உங்க சொத்து…. எனக்கு கிடைச்சிருக்குற மிகப்பெரிய சொத்து என் சித்ரா… இவ போதும் எனக்கு…” சிவா பட்டென்று சொல்ல, தன் கணவனை பெருமை பொங்கும் பார்வை பார்த்தாள் சித்ரா

“எப்படியோ நீ நினைச்சதை சாதிச்சிட்ட…..” சிவாவிடம் இருந்து சித்ராவிடம் திரும்பியவாள்

“நல்லா இரும்மா… இனி இந்த பெத்தவளை பார்க்க வந்திடாத…. நாங்களும் இப்படி ஒரு மக இருந்ததை மறந்திடுறோம்…” வெறுப்பாகச் சொன்னவளின்  மனதில் பெருத்த ஏமாற்றம் இருந்தது….. ஒரே மகன் சொத்து முழுவதும் கார்த்திகிற்கு சொந்தம்… அவனை சித்ராவிற்கு முடித்து விட்டால் சொத்து பிரிந்து வெளியே போகாது… என்று எண்ணி இருந்தவளுக்கு…. இப்படி நடந்து முடிந்தது பெருத்த ஏமாற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்…

அதற்கு மேலும் ராஜேஸ்வரி அங்கு நிற்கவில்லை… வேகமாக தனது கணவனை நெருங்கியவள்…… அங்கு என்ன வேடிக்கை வேகமா வாங்க என்பது போல் பார்க்க….. அவரும் தன் மகளையும் தன் மனைவியையும் மாறி மாறிப் பார்த்தார்…. பின்பு தன் மனைவியின் பின்னால் நடக்க ஆரம்பித்தார்…

மாணிக்கம் நடந்துக் கொண்டிருந்ததை பார்த்தவாறே அப்படியே அமர்ந்திருக்க… அவரருகே வந்த ராஜேஸ்வரி….

“அண்ணா… உன்னை நம்புனதுக்கு… உன் மகன் நல்லா வச்சு செஞ்சிட்டான்….” என்று சொன்னவள் அவரின் பதிலைக் கூட எதிர்பார்காமல் விறு விறுவென வாசலை நோக்கி நடக்க ஆரம்பிக்க…
எதுவும் பேசாதவராக ரங்கராஜனும் பின்னே சென்றார்….

கல்யாணம் வித்தியாசமான முறையில் நடந்து முடிந்திருக்க…. கூட்டம் கலைய ஆரம்பித்தது…. கார்த்திக்கின் நண்பர்கள் அனைவரும் சிவாவை சூழ்ந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை சொல்ல ஆரம்பித்திருந்தனர்…

சிவாவும் நெளிந்து கொண்டே…. இந்த எதிர்பாரா திருமணத்தால் வந்த இன்ப அதிர்ச்சியையும்  வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டு நின்றிருந்தான்…

கோபத்தோடையே நின்றிருந்த கார்த்திக்…. சித்ராவிடம் வந்தான்…..
“ஏன் சித்ரா இப்படி பன்ன…. அன்னைக்கே இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னு சொல்லிருக்கலாமே… ஏன்… இப்படி…” கார்த்திக் மெல்லிய குரலில் கேட்க..

“என்னை என்ன மாமா பன்ன சொல்றீங்க….? இவரு என்னை வேண்டாம்னு ஒதுக்கி தள்ளிட்டாரு… அம்மா வேற கல்யாணத்துக்கு ஏற்பாடு பன்னிட்டாங்க…. நான் என்ன பன்றது… அப்ப எனக்கு வேற வழி தெரியலை மாமா...” மெல்லிய குரலில் பதிலலித்தாள் சித்ரா…..

“எனிவே…. உங்களோட மேரேஜ்கு என்னோட வாழ்த்துக்கள்….” என கையை உயர்த்தி இருவரையும் பார்த்துச் சொன்னவன் வேகமாக தனது அப்பாவை நோக்கி நடக்க ஆரம்பிக்க….

“மாப்ள…”என்ற சிவாவின் குரல் கார்த்திக்கை நிறுத்த…. திரும்பி முறைத்தவன்

“என்கிட்ட பேசாதடா….. லவ் பன்னேல்ல ஒரு வார்த்தை என்கிட்ட சொன்னியாடா…?” கார்த்திக்கின் குரலில் கடுகடுப்பு..

“மாப்ள…. நான் லவ் பன்றேன்னு…. இவகிட்ட கூட இன்னும் சொல்லலையேடா… அப்றம் எப்படிடா என் லவ்வ சொல்லுவேன்…. அதுவும் கல்யாணத்துக்கு சொல்ல வந்த உன்கிட்ட எப்படிடா…. சொல்லுவேன்…” என சிவா வருத்தத்தோடு சொல்ல….

சித்ராவின் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு….. “அப்பாடா… ஒருவழியா என்னை லவ் பன்றேன்னு ஒருத்தர் ஒத்துக்கிட்டார்யா.….” சிரிப்போடு சொன்னாள் சித்ரா…

“ஏன்டி…. உங்கம்மா… உன்னை  கழுவி கழுவி ஊத்திட்டு போறாங்க… உனக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லை….” என கார்த்திக் கேட்க…

“நான் ஏன் மாமா வருத்தப்படனும்…… நான் எந்த தப்பும் செய்யலையே…. அவங்க சொன்ன பேச்சை கேட்டுத்தான் இதுவரைக்கும் இருந்தேன்… அவங்க என்னை தப்பா புரிஞ்சுக்கிட்டதுக்காக….. நான் என்ன பன்ன முடியும்….”

“ஓஹ்… புத்திசாலித்தனமா பேசுறேன்னு நினைப்போ…. எப்படியோ  நல்லா இருந்தா சரி…” என்றுவிட்டு தனது அப்பாவை நோக்கி நடக்க ஆரம்பித்தான்

ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்த சிவாவின் அப்பா பரணியும், அம்மா மேகலையும் மணமக்களை சூழ்ந்து கொண்டனர்….

“என் மகராசா…. பெத்தவங்களுக்கு ஒத்த பைசா… செலவே வைக்காம கல்யாணத்தை முடிச்சிட்டியேடா……” என தன் மகனின் கண்ணத்தை தடவி சொடக்கு போட்டாள் மேகலை…

“அம்மா…. என்னம்மா… நீங்க வேற நேரம் காலம் தெரியாம……”என சிவா சலித்துக் கொள்ள….

சித்ராவிடம் திரும்பிய மேகலை….. “அம்மாடி…. என் மருமவ இம்பூட்டு அழகா…”என்றவாறு சித்ராவின் கண்ணத்தை பிடித்துப் பார்த்து வியந்தவள் தன் விரலில் முத்தமிட்டுக் கொண்டாள் மேகலை….

பரணியும் முகத்தில் மகிழ்ச்சியோடு நின்றிருந்தார்….. என்னதான் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் திருமணம் நடந்திருந்தாலும்…. சிவாவின் முடிவே அவர்களின் முடிவு என்பது உன்மை… எனவே சிவாவின் பெற்றோர்களும் மகிழ்ச்சியில் இருந்தார்கள்….. 

கல்யாணத்திற்கு வந்திருந்த நண்பர்கள்… சிவாவை கேளியும் கிண்டலுமாக.. ஓட்டி எடுத்தனர்… சிவா நெளிய சித்ரா புன்னகையுடன் அதை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்….

அப்பாவின் அருகே அமர்ந்த கார்த்திக்… “அப்பா.. என் மேல உங்களுக்கு கோபம் எதுவும் இல்லையே…”

இத்தனை நேரம் நடந்தவை அனைத்தையும் பார்த்திருந்தவரின் மனதில் தன் மகனின் திருமணம் நின்றுபோனதில் ஏமாற்றம் இருந்தாலும்… அவன் செய்தது அனைத்தும் சரியே என்பதை புரிந்து கொண்டார்… கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் செய்து பயனில்லை…. அதுபோல் திருமணம் முடிந்த பிறகு, இந்த திருமணம் தவறோ என யோசிப்பது நல்லதல்ல…. என்பதை அறிந்திருந்தார்… எனவே தன் மகனிடம் திரும்பியவர்…

“நீ செஞ்சது நூறு சதம் சரிதான் அப்பு….. உன் மேல கோபப்பட்டு எதுவும் ஆகப் போறதில்ல… நான் சித்ராவை விசாரிக்காம கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிருக்கக் கூடாது… இதுல என் தப்பும் இருக்கு….” என நிறுத்தியவர்..

“சரி எது எப்படியோ இனி ஆக வேண்டியதை பார்ப்போம்…” என எழுந்து கொண்டார் மாணிக்கம்…

தன் அப்பா தன்னை புரிந்து கொண்டாரே என மனம் மகிழ்ந்தவன்….. “புரிஞ்சிக்கிட்டதுக்கு தேங்ஸ் பா…” என்றவனை நோக்கி ஒரு புன்னகையை சிந்தியவர்… மணமக்களை நோக்கி நடக்க ஆரம்பித்தார் வாழ்த்துவதற்க்காக.

கல்யாணம் நின்று போனதில் கார்த்திக் ரொம்பவும் மகிழ்ச்சியடைந்திருந்தான் என்று சொன்னால் அது மிகையாகாது…. நடந்த கலாட்டாவில் இத்தனை நேரம் நினைவில் இல்லாத அந்த தேவதை இப்பொழுது கார்த்திக்கின் மனதை ஆட்சி செய்ய ஆரம்பித்தாள்…

“எனக்கும் அவளுக்கும் ஏதோ ஒரு வயர்லெஸ் கனெக்சன் இருக்கிறது…. அதனால்தான் அவளை திரும்பவும் சந்திக்க நேர்ந்தது…. சந்தித்த அடுத்த சில மணி நேரங்களில்… தன் திருமணத்தை நிறுத்துவதற்கான விசயமும் தெரியவந்தது… கூட்டி கழித்து பார்த்தால் அவள்தான் உனக்கானவள் என உணர்த்த நினைக்கின்றானோ இறைவன்…. என அவனுடைய நினைப்பிற்கு காரணமும் சொல்லிக் கொண்டான்…

ஒரு வேளை நான் மட்டும்தான் இப்படி நினைத்துக் கொண்டு இருக்கின்றேனா….? இல்லை அவளும் என்னைப் பற்றி நினைப்பாளா…? இப்பொழுது அவள் என்ன செய்து கொண்டிருப்பாள்…? அவள் பெயர் என்னவாக இருக்கும்….? எலிசபெத்  மகாராணியா அவள்….? இல்லை.. கொங்கு நாட்டின் இளவரசியா…? இவ்வளவு அழகாய் இருக்கிறாளே….!! இன்னும் யாரையும் காதலிக்காமல் இருப்பாளா….? 

இல்லை ஏற்கெனவே யாரையாவது காதலித்துக் கொண்டு இருக்கிறாளா…..?
சப்பை ஃபிகருக்கே… பலகாதல் கடிதங்கள் கொடுக்கும் இந்த காலத்து பசங்களுக்கு மத்தியில், இப்படி ஒரு அழகு தேவதையை மிச்சம் வைத்திருப்பார்களா…? ஒருவேளை… ஆல்ரெடி அவள் லவ்வீக வாழ்கையில் விழுந்திருந்தால்…..?  இப்படி பலப் பல கேள்விகளை எழுப்பியவன்…. இல்லை இருக்காது… இருக்கக் கூடாது. ஒருவேளை… ஒருவேளை…. இருந்துட்டா….?

“ஊஹும்…. திங் பாசிடிவ்….. டு நாட் திங் நெகடிவ்…  அப்படி எல்லாம் இருக்காது…. அப்படி எல்லாம் இருக்காது…. என தன் அலை பாயும் மனதை அமைதிபடுத்தினான்”

மணமக்களை வாழ்த்திவிட்டு வந்த மாணிக்கம்…. “வா அப்பு… வீட்டுக்கு போகலாம்…” என மகனை பார்க்க….

கார்த்திக் அப்பாவுடன் வாசலை அடைந்து காரை நோக்கி நடந்தான்….

“அப்பு….”

“சொல்லுங்கப்பா….”

“இந்த கல்யாணம் நின்னு போனதுல உனக்கு எதுவும் வருத்தம் இல்லையே…..”

“கல்யாணம் எங்கப்பா நின்னுச்சு அதான் நல்லபடியா முடிஞ்சதே….”

“நான் உன் கல்யாணத்தை பத்தி கேட்டேன் அப்பு….”என்றார் கார் பின் கதவை திறந்தபடி….

“இல்லைப்பா…. அதெல்லாம் ஒரு வருத்தமும் இல்லை…. ஆக்சுவலா… நான் இப்பதான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன் பா…” என அவனும் அப்பாவின் பக்கத்தில் அமற, அவர் வெடுக்கென மகனைப் பார்த்தார்… வண்டி வீட்டை நோக்கி பயணித்தது…

“என்ன அப்பு சொல்ற…? இப்பதான்… ஹேப்பியா இருக்கியா…..?”

அப்பாவின் திடீர் கேள்வியால் தடுமாறியவன்…. “அது…. அதுவந்துப்பா… ஒரு காதலர்களை சேர்த்து வச்சுட்டோம்குற ஒரு சந்தோசம்பா….”என சமாளித்தான்..

“ஓஹ்….” என மாணிக்கம் அமைதியாக சாலையை வெறிக்க ஆரம்பித்தார்.. மகனின் கல்யாணம் நின்று போனது சரிதான் என்றாலும்…. அவருடைய மனதில் சிறிது வருத்தம் இருக்கவே செய்தது.

அன்று  மாலை….. சிந்தாரிப்பேட்டையில் சிவாவின் ஒரு தளம் போட்ட சுமாரான ஒரு வாடகை வீடு.. சிவா அவனுடைய அப்பா,அம்மா, மற்றும் அவனுடைய தங்கை சோபனா ஆகியோர் வாழ்ந்து வந்த வீட்டில் ஐந்தாவதாக சித்ராவும் சேர்ந்து கொண்டு அந்த வீட்டு மருமகளாக விளக்கேற்றினாள்… அந்த வீட்டினுள்… இப்பொழுது தற்காலிகமாக சிறு கூட்டம் ஒன்று கூடி இருந்தது… சிவா வீட்டின் அக்கம் பக்கத்தினர்… மணமக்களை பார்க்க வந்திருந்தனர்…

கல்லூரி முடிந்து விட்டிற்கு வந்த சோபனா கயல் படத்தில் நடித்த ஆனந்தியின் சாயலில் இருந்தாள், வீட்டை நோக்கி வந்தவளுக்கு  வாசலில் நிறைய செருப்புகள் காணக் கிடைத்தது…. நெற்றியில் விழுந்த சுருக்கத்துடனே வீட்டிற்குள் நுழைந்தவள்…. விழிகள் விரிய அப்படியே அதிர்ந்து போய் நின்றாள்…

தன் அண்ணனை மாலையும் கழுத்துமாக கண்டதும்…. அங்கிருந்த அனைவரும் அவளது கண்ணுக்கு தெரியவில்லை….

“டேய்… அண்ணா…. என்னடா.. இதெல்லாம்…..?”என்பவளுக்கு புன்னகையை பதிலாகக் கொடுத்தான் சிவா….

“அடப்பாவி…. சொந்த தங்கச்சியைக் கூட கல்யாணத்துக்கு கூப்பிடாம.. இப்படி கல்யாணம் பன்னிட்டு வந்துட்டியேடா...” எனக் கத்தியவளை உள்ளே இழுத்துச் சென்று நடந்ததை விளக்கமாக எடுத்துச் சொன்னாள் மேகலை…

அக்கம்பக்கம் உள்ளவர்கள் மணமக்களை பார்த்துவிட்டு சென்றிருந்தனர்.
என்ன பேசுவது என்று தெரியாமல் சிவாவும்,சித்ராவும்  ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்…

சோபனா முகம் கழுவி ட்ரெஸ் மாத்திக் கொண்டு வந்தவள்…. தனது அண்ணியின் அருகே ஒரு சேரை போட்டு அமர்ந்து கொண்டாள்…. சித்ராவின் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்தவள்….

“அண்ணி… நீங்க… ரொம்ப அழகா இருக்கீங்க…..” என்றாள்

அழகாக வெட்கப்பட்ட சித்ரா “தேங்ஸ்…” என்றாள் மெல்லிய குரலில்…

ஒன்றுமே தெரியாதது போல் அமர்ந்திருக்கும் தனது அண்ணனை சீண்ட எண்ணியவள்…. “என்ன அண்ணி… நீங்க இவ்ளோ அழகா இருக்கீங்க…. போயும் போயும் இந்த மூஞ்சிய லவ் பன்னிருக்கீங்களே…. போங்கண்ணி….”என போலியாக சலித்துக் கொள்ள….

சிவா தன் தங்கையை கடுப்புடன் முறைத்தான்…. “ஏய் குட்ட வாத்து…. என்கிட்ட அடி வாங்குறதுக்குள்ள… ஓடிப் போயிடு…”என எகிறினான்
அதைக் கண்ட சித்ராவிற்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது…. வாய்விட்டு சிரித்தாள் சித்ரா…

“ஹாஹா…ஹா….ஹா…ஹா..”

இப்பொழுது சிவாவின் முறைப்பு சித்ராவை நோக்கியது…. அவனின் முறைப்பை கண்டவள் வாய் பொத்தி சிரிப்பை அடக்கினாள் ஆனால் கையையும் மீறி சிரிப்பு வெளிபட்டது… இது என்னதான் அவ்வளவு பெரிய காமெடி இல்லை என்றாலும்.. இதெல்லாம் சித்ராவிற்கு புதியது என்பதால் சிரிப்பு வந்தது…

நைட் உள்ள வாடி உன்ன வச்சிக்கிறேன் என்பது மாதிரி இருந்தது சிவாவின் பார்வை…

அதன் பிறகு கொஞ்ச நேரத்தில்…. சோபனா தன் அண்ணியை தனது அறைக்கு அழைத்துச் சென்றிருந்தாள்….

இந்த ட்ராயிங்கை பாருங்கண்ணி நானே வரைஞ்சது என சித்ராவின் முன்னே ஒரு பெரிய A3 சைஸ் பேப்பரை நீட்டினாள்… 

அந்த வரைபடத்தில் “ஒரு குளம் பாளம் பாளமாக வெடித்து வறண்டு போய் இருக்க.. ஒரு வயதானப் பெண் ஒருத்தி அருகில் ஒரு குடத்தை வைத்துக் கொண்டு குச்சியால் தரையை தோண்டிக் கொண்டிருந்தாள்… அந்த ஊரின் தண்ணீர் பிரச்சனையை சொல்லாமல் சொல்லியது, மிகவும் தத்ரூபமாக வரையப் பட்டிருந்த அந்த ஓவியம்.

“நைஸ்… நல்லா இருக்கு…”

“தேங்ஸ் அண்ணி…. இது எங்க சொந்த ஊர்ல இருக்கும்போது நான் வரைஞ்சது… இந்த குளம்கூட எங்க வீட்டு பக்கத்துலதான் இருக்கு… இப்ப ரெண்டு வருசமாத்தான் இங்க வந்து இருக்கோம்…” எனச் சொல்லியவாறே அடுத்ததொரு ஓவியத்தை எடுத்து காட்ட ஆரம்பித்தாள்…

தான் இதுவரை வரைந்து வைத்திருந்த அத்துனை ஓவியங்களையும் காட்டிக் கொண்டே வர…

“நைஸ்….., சூப்பர்…., வொன்டர்ஃபுல், ஃபென்டாஸ்டிக்….. ஆசம்..,மார்வலஸ்….,பியூட்டிஃபுல்…. செம….” என அடுக்கடுக்காக தனது அண்ணியிடம் பாராட்டுக்களை வாங்கியவளுக்கு அப்படி ஒரு சந்தோசம்…. சித்ராவை அவளுக்கு ரொம்பவும் பிடித்துப் போனது… 

அதன்பிறகு கொஞ்ச நேரம் சோபனா தனது கல்லூரி கலாட்டக்களைச் சொல்லி சிரித்துக் கொண்டிருக்க…. சித்ராவும் சேர்ந்து வயிறு குலுங்க சிரித்துக் கொண்டிருந்தாள்….

சிவா எப்பொழுது வந்தான் என்று தெரியவில்லை…. தனது தங்கையின் அறை வாசலில் நின்றுகொண்டு குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருக்கும் சித்ராவையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். ஆனால் அவர்கள் இருவரும் இவனை கவனிக்கவில்லை..

“என்னிடம் என்ன இருக்கிறது என்று என்னை இவள் காதலிக்கிறாள்…? ஊரில் இருக்கும் ஒரு ஓட்டுவீட்டைத் தவிற்த்து சொத்து என்று சொல்லிக் கொள்ள என்னிடம் எதுவும் இல்லை… என் நிலை அறிந்தும் என்னை காதலித்திருக்கிறாள் என்றாள் இவளது காதல் எத்துனை தூய்மையானது….? எத்துனை  மேன்மையானது…? எத்துனை அழகாய் இருக்கிறாள்… இதற்கெல்லாம் நான் தகுதியானவன் தானா…? ஏதோ விளையாட்டுத்தனமாய் என்னை காதலிப்பதாய் சொல்வதாக நினைத்திருந்தேனே…. இவளின் காதலை நான் தவறாக எடை போட்டுவிட்டேனோ…? கார்த்திக்கை கட்டிக்கொண்டு இருந்திருந்தால் கூட என்னையே நினைத்துக் கொண்டிருப்பேன் என்றாளே…. இவளின் காதல்தான் எத்துனை… ஆழமானது…?” என தன்னை மறந்து சிந்தித்தவனாக நின்றிருக்க…

“எல்லாம் இங்கதான் இருக்கீங்களா…. எல்லாம் சாப்பிட வாங்க….” என மேகலை சத்தம் கொடுக்க அப்பொழுது அறையில் இருந்த இருவரும் வாசலைப் பார்க்க… சிவா சித்ராவின் மீது பார்வையை வீசியவனாக நின்றிருந்தான்

“டேய்… அண்ணா…. எங்கண்ணியை நீ சைட் அடிக்கிறியா…? பிச்சுப்புடுவேன் பிச்சு… ராஸ்கல்….” என அதட்டலாக சொல்ல
“ஹேய்…. ஸீ இஸ் மை வைஃப் யூ நோ…? என்னோட பொண்டாட்டிய நான் பாக்குறேன் உனக்கென்ன….”

“டேய் டேய்… அடங்குடா… எனக்கு தெரியும்… என்னமோ இத்தனை நாள் அண்ணிய பார்க்காதவன் மாதிரி ஆந்த மாதிரி முழிய வச்சிக்கிட்டு பார்க்குறான்…”  சோபனா நக்கல் பேச

“ஆமாமாம்… இவரு இன்னைக்குதான் என்னை ஒழுங்கா பார்க்குறாரு…” என குறும்பு குரலில் சித்ரா சொல்ல

“என்னண்ணி சொல்றீங்க… இன்னைக்குதான் உங்களை ஒழுங்கா பாக்குறானா…?”

“ஹேய்…. நீ முதல்ல அவரை வாடா… போடான்னு… மரியாதை இல்லாம பேசுறத நிறுத்து…” என கண்டிப்பு குரலில் சித்ரா சொல்ல

“பார்டா… முதல் நாளேவா… ஹ்ம்ம் நடத்துங்க… நடத்துங்க…  ஆனால் எனக்கு அவனை…. சாரி சாரி… அண்ணனை…. வாடா போடான்னு சொல்லிதான் பழக்கம்….  இனி மாத்திக்க ட்ரை பன்றேன்…? என் செல்ல அண்ணிக்காக இதுக்கூட செய்யமாட்டேனா…”என சித்ராவின் கண்ணத்தை பிடித்து செல்லம் கொஞ்சினாள் சோபனா…  பார்த்துக் கொண்டிருந்த சிவாவுக்கு தங்கை மீதே பொறாமை ஏற்பட்டது…. இன்னும் கொஞ்ச நேரம்தான் அப்பறம் நம்ம கொஞ்சலாம் என நினைத்துக்கொண்டான் சிவா….

“அதுசரி அண்ணி…, அண்ணா உங்களை ஒழுங்கா பார்க்கமாட்டான்னு…. சாரி… சாரி… பார்க்கமாட்டார்னு  சொன்னீங்களே… அப்ப ரெண்டு பேரும் லவ் பன்னும்போது அப்படி என்னதான் பண்ணிட்டு இருப்பீங்க…. ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்கும்போது அண்ணா திரும்பி உட்கார்ந்துக்குவானோ.. சாரி… ‘ரோ’…?”

“உங்கண்ணா எங்கே எண்ணை லவ் பன்னாரு…. என்னை அவர் பின்னாடில்ல சுத்த விட்டாரு….!” என சலிப்பாக சிவாவை பார்த்தவாறு சொல்ல…

இப்பொழுது சிவா  வேகமாக அந்த இடத்தைவிட்டு அகன்றான்….
“என்னண்ணி சொல்றீங்க….. அண்ணா.. உங்களை லவ் பன்னலையா…..?” என்றாள் அதிர்ச்சியுடன்

“உங்கண்ணா சரியான கேடி….. அது ஒரு பெரிய கதை சோபனா…. அதை நான் உனக்கு இன்னொரு நாள் சொல்றேன்….. அண்ணிக்கு இப்ப பசிக்கிது சாப்பிடப் போலாமா…?” என தன் வயிற்றை தடவிக் காட்ட…

அடுத்த கால்மணி நேரத்தில் அனைவரும் சாப்பிட்டு முடித்திருக்க…
கார்ட்டூன் சேனலில் டாம் அன்ட் ஜெர்ரி ஓடிக் கொண்டு இருக்க…. சோபனா சிரிக்க..  கூடவே சித்ராவும் சிறு குழந்தை போல் சிரித்துக் கொண்டிருந்தாள்… சிவா கடுப்புடன் அவளை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்… 

மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு வந்து எட்டு மணி நேரம் ஆகப் போகிறது…. இன்னும் அவள் என்னிடம் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லையே என்கிற கடுப்புடன் சித்ராவை முறைக்க…. அவள் இவனை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை…

“டி.வி பார்த்தது போதும் சோபனா போய் படு….”எனச் சொல்லிவிட்டு தனது மருமகளிடம் திரும்பிய மேகலை

“சித்ரா கண்ணு…. இந்தாம்மா இது எனக்காக வாங்குன சேலைதான் இன்னும் உடுத்தாம ரொம்பநாளா வச்சிருந்தேன்… போய் குளிச்சிட்டு இந்த சேலையை மாத்திக்க….” எனச் சொல்லிவிட்டு அடுக்களைக்குள் நுழைந்து கொண்டாள் மேகலை…

அத்தனை நேரம் கடுப்புடன் அமர்ந்திருந்தவன்…. இப்பொழுது நிமிர்ந்து அமர்ந்தான்… இன்னும் கொஞ்ச நேரம்தான்…. சித்ரா என்னும் புதையலை கைப் பற்றுவதற்கு… இன்னும் கொஞ்ச நேரம்தான்… என எண்ணிக் கொண்டு அமர்ந்திருக்க….

கையில் ஆரஞ்சு வண்ண சேலையை வைத்திருந்த சித்ரா….. ஓரக் கண்ணால் தனது கணவனை நோட்டம்விட்டாள்….

அவள் பார்ப்பதை பார்த்த அவன்…. என்ன என்பது போல் தலையசைக்க… ஒன்னுமில்லை… என தலையசைப்பில் சொல்லிக் கொண்டு பாத்ரூமிற்கு குளிக்கச் சென்றாள்…


அடுத்தநாள் காலை…..

செல்போன் அலறி சிவாவை எழுப்பிவிட்டது….  காலாங்காத்தால யாருடா இது… என எரிச்சலோடு செல்போனை எடுத்து காதில் பொருத்தினான்…

“குட் மார்னிங் மச்சி…. என்ன… நைட் ஃபுல்லா…. ஹ்ம்ம்… ஹ்ம்ம்….” என்றது மறுமுனை…

தரையில் பாய் விரித்து படுத்திருந்த சிவா… கட்டிலில் படுத்து எந்த வித சலனமும் இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கும்… சித்ராவை ஏக்கமாக ஒரு பார்வை பார்த்து…  பெருமூச்சொன்றை உதிர்த்துவிட்டு போன் காலுக்கு பதில் சொன்னான்…

“டேய்… கணேஷ்… என் வாயில இருந்து நல்லா வரும்டா… ஒழுங்கா  போனை ஆஃப் பன்னிட்டு ஓடிப் போயிடு...”எனக் கடுப்புடன் கத்திவிட்டு… போனை கட் செய்து தலையனை மீது தூக்கி போட்டான்

நேற்று இரவு……

கார்த்திக் தன் அறையில் ஆசையோடு…. சித்ரா என்னும் புதயல் எடுக்கும் ஆர்வத்தோடு கட்டிலில் அமர்ந்து காத்திருக்க…. தமிழ் சினிமா மற்றும் கதைகளின் வழக்கப் படி… கையில் பால் சொம்போடு அறையினுள் அடி எடுத்து வைத்தாள் சித்ரா…. ஆரஞ்சு வண்ணப் புடவையில் கூந்தலில் மயக்கும் மல்லிகையோடு…. சான்டல் சோப்பின் வாசத்தோடும் ஓவ்வொரு அடியாக எடுத்து வைத்து மென்னடை நடந்து வந்து சொம்பை டேபிளில் வைத்தவள் கார்த்திக் அமர்ந்திருந்த கட்டிலில் அவனுக்கு கொஞ்சம் தள்ளி அமர்ந்தவள் தலை குனிந்தாள்….

சிவா இப்பொழுது அவளுக்கருகே நெருங்கி அமர்ந்தவன்.. அவளது தாடையில் கைவைத்து தலை நிமிர்த்த தாழ்ந்திருந்த அவளது கண்கள் நிமிர்ந்து சிவாவை ஏறிட்டன… அவளது கண்களை பார்த்தவாறே…. இன்னும் நெருங்கியவன்…. அவளது தோளில் கைப் போட்டான்….  அவ்வளவுதான் அதுவரை அமைதியாக அமர்ந்திருந்தவள்…. வெடுக்கென சிவாவின் கையை தட்டிவிட்டு முறைத்தாள்… 

அவனை விட்டு தள்ளி அமர்ந்தாள்…. “ஹேய்…. இப்ப என்னாச்சு….. என் சித்ரா செல்லத்துக்கு…”என்றபடி மீண்டும் அவளருகே அமர்ந்தவன் ஒரு படி மேலே சென்று அவளை அனைக்க…… வெகுன்டெழுந்தவள்….. அவன் கண்ணத்தில் பளாரென அறை கொடுத்தாள்…. இதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை…. விதிர்த்துபோய் தனது கண்ணத்தை பிடித்தபடி…..

“எ…என்ன… சித்ரா… இப்படி அடிக்கிற….” என பரிதாபக் குரலில் சொல்ல

“பின்ன உன்னைலாம் அடிக்காம கொஞ்சுவாங்களாடா…. என் வாயில இருந்து என்னமாத்தான் வருது….. சுயநலம் புடிச்சவனே…” ஆத்திரத்துடன் சொன்னவளின் பேச்சில் மரியாதை வெகுவாக குறைந்திருந்தது….

கொஞ்ச நேரம் முன்னாடி “அவரை வாடா…. போடா…” என பேசாதே என்று தங்கையிடம் கடிந்து கொண்டவளா இவள் என நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருக்க…

இப்பொழுது அவள் விசும்ப ஆரம்பித்தாள்…. முகம் கலை இழந்து போயிருந்தது..…  “ஏன்டா…ஏன் இப்படி பன்ன…. இன்னைக்கு மட்டும் இப்படி நடக்கலைன்னா…. உன்னை நினைச்சு நினைச்சே கொஞ்சம் கொஞ்சமா… செத்திருப்பேனாடா…. அவ்வளவு சுயநலம் பிடிச்சவனாடா…. நீ… என் மனசை கொஞ்சமாவது நீ புரிஞ்சி வச்சிருந்தால் இப்படி நீ நடந்துக்குவியா….” என மூக்கை உறிஞ்சிக் கொண்டாள் சித்ரா

“சி…சித்ரா…. சா… சாரி….”என அவள் கண்ணத்தில் கை வைத்து கண்ணீரை துடைத்துவிட…. மீண்டும் அவனது கையை தட்டிவிட்டவள்….. கட்டிலை விட்டு கீழே இறங்கிச் சென்று தரையில் படுத்துக் கொண்டாள்…

“ஹேய்… என்ன சித்ரா இதெல்லாம்…. சின்ன குழந்தையாட்டம் வெறும் தரைல எல்லாம் போய் படுத்துக்கிட்டு…. மேல வா… எழுந்திடு… எழுந்திடுன்றேன்ல…” என அவளது கையை பிடித்து எழுப்பி கட்டிலுக்கு கூட்டிச் சென்று அமர வைத்தான்…..

“சரி… இன்னைக்கு நீ கோபமா… இருக்க… எல்லாம் நாளைக்கு பார்த்துக்கலாம்….படுத்துக்க….” என சிவா சொல்ல சித்ரா முன்னைவிட இப்பொழுது இன்னும் கோபமாக முறைத்தாள்….

“உன்னெல்லாம்…. என்ன பன்னாலும் தகும்டா…. நீ எந்த கஷ்டமும் இல்லாம நோகாம நொங்கு திங்கலாம்னு பாக்குறேல்ல…… உன்னை இப்ப என்ன பன்றது…”

“சரி…. நான் சுயநலம் புடிச்சவனாவே இருந்துட்டு போறேன்…… இப்ப என்னை என்ன பன்ன சொல்ற…” என எரிச்சலோடு சொல்ல…

“ஒன்னும் பன்ன வேண்டாம் மூடிட்டு வந்து படு….” என்றுவிட்டு சித்ரா கட்டிலில் படுத்துக் கொண்டாள்… 

ஒரு புருஷனுக்கு உண்டான மரியாதை போச்சேடா….. என முனு முனுத்தபடி…. கட்டிலில் இடதுபுறம் வந்து அவன் படுத்துக் கொண்டான்…

முதல்முறையாக அதுவும் தனக்கு மிகவும் பிடித்த மிகவும் அழகான பெண், தன் படுக்கையில் மிக அருகே வாசனையாக படுத்திருந்தால் எந்த ஆணால்தான் சும்மா இருக்க முடியும்…. கைகள் பரபரக்க… அடிக்கடி சித்ராவின் அழகு அதரங்களையே பார்த்துக் கொண்டான்… 

“அவள் மேல் கை வைத்தால் எங்கே இன்னொரு அறை கொடுப்பாளோ என பயந்தவன்… அதற்குமேலும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை…. கட்டிலைவிட்டு  எழுந்தவன்  ஓரமாக கிடந்த பழைய பாயை எடுத்து விரித்து படுத்துக் கொண்டான்…. 

பாய் விரிக்கும் சத்தத்தில் கண் மூடி இருந்தவள் கண் திறந்து பார்த்து… “ஏன் கீழே போயிட்டீங்க…. மேலேயே படுத்துக்க  வேண்டியதானே…” திடீரென அவளின் பேச்சில் மரியாதை வெளிப்பட்டது, வெடுக்கென நிமிர்ந்து பார்த்தான்…

“ஒன்னும் வேணாம் நீ மட்டும் தூங்கு” எனச் சொன்னவன்…. “திடீர்னு பேச்சுல மரியாதை வந்திருச்சு… இதை சலுகையா வச்சிக்கிட்டு மேல போய் படுத்துக்கிட்டா…. ஊஹும்….. என் கை கால் சும்மா இருக்காது…. இன்னொரு முறை  என்னால் அறை வாங்க முடியாது என தனக்குள் சொல்லிக் கொண்டு அவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான்…. அதன் பிறகு எப்பொழுது உறங்கினான் என்று தெரியவில்லை…. 

அவனுடைய நண்பன் கணேஷ் கால் பன்னவும்தான் கண் விழித்தான்…
சோம்பல் முறித்தவாறு வெளி வந்த சிவாவிடம்….

“என்னண்ணா…. மூஞ்சிலாம் பிரைட்டா இருக்கு…. அட.. அட… வெட்கத்தை பாரு…. ஹா…ஹா…” என சோபனா கிண்டலடிக்க… 

அவளை கடுப்புடன் முறைத்த சிவா… வேகமாக வந்து அவளது தலையில் நறுக்கென்று ஒரு கொட்டு வைக்க….

“ஆ..ஆ….”  சோபனா சத்தம் போட….

“என்னடி அங்க சத்தம்…. “ மேகலை உள்ளிருந்து கத்த….

“அம்மா… பாரும்மா… இவனை…. மண்டைல கொட்டுறான்மா…..”  தன் முகத்தை சுழித்தவாறு தலையில் தேய்த்துக் கொண்டு…. அம்மாவிடம் புகார் கூற…

காலங்காத்தாலேயே அண்ணனும் தங்கச்சியும் ஆரம்பிச்சாச்சா… “கல்யாணம் ஆயிடுச்சுல…..எருமை மாடு மாதிரி இருக்க ஏன்டா சின்ன புள்ளைய போட்டு கொட்டுற…” என அம்மா சிவாவிடம் எகிற….

“வெவ்வெவே….. “என பழிப்பு காட்டினாள் சோபனா..

“அம்மா…. ஃபர்ஸ்ட் அவதான் என்னை வம்புக்கு இழுத்தா… என்னை குறை சொல்லாதீங்க…. அவளை அடக்கி வைங்க முதல்ல…” என்றவாறே குளியளறை நோக்கிச் சென்றான்..

************************

“பேப்பர் படித்துக் கொண்டிருந்த மாணிக்கம் நிமிர்ந்து பார்க்க… காலையிலேயே குளித்துமுடித்து ரெடியாகி கீழே வந்திருந்தான் கார்த்திக்….

“காலையிலேயே எங்கே கிளம்பிட்ட….அப்பு..” கேள்வியாக மகனை பார்க்க

“அப்பா…. என்னோட பைக்க ரிப்பேர்கு விட்டிருந்தேன்…. அதை வாங்கிக் கிட்டு அப்படியே இன்டெர்வியூ அட்டென்ட் பன்னிட்டு வந்திடுறேன்பா…”

“ஹ்ம்ம் சரி அப்பு…. சாப்பிட்டு போ……. அப்பு…”

“இல்லைப்பா டைம் ஆயிடுச்சு… இப்ப போனாத்தான் சரியா இருக்கும்… நான் வெளியே சாப்டுக்குறேன் என்றுவிட்டு வெளியேறினான்…

கார்த்திக்கை அந்த வொர்க்சாபில் இறக்கிவிட்டு திரும்பவும் வீட்டிற்குச் சென்றான் துரைச்சாமி

பழய பைக்கின் சென்டிமென்டால் புதியதாக ஒரு பைக் வாங்கும் எண்ணம் கார்த்திக்கிற்கு வரவில்லை….. எனவே கலேஜில் படிக்கும்போது உபயோகித்த… இத்தனை நாள் வீட்டின் ஒரு மூலையில் நின்றிருந்த பைக்கை சர்வீஸுக்கு விட்டிருந்தான்… பைக் சர்வீஸ் செய்யப்பட்டு புதிய பொழிவுடன் இருக்க… பைக்கை கிளப்பி… இன்டெர்வியூ நடக்கும் சாஃப்ட்வேர் கம்பெனியை நோக்கி பறந்தான்…

ரெஸூமை பார்த்த HR வாயை பிளந்தார்…. ரெஸூமில் இருந்த ஒரே ஒரு வாசகம் அவரின் வாயை பிளக்க வைத்தது…. அது நாசா… ஒன் அன்ட் ஹாஃப் இயர் எஸ்பீரியன்ஸ்…. அதற்குமேலும் அவனுக்கு அங்கு வேலை இல்லை என சொல்லிவிடுவார்களா என்ன…? அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை அனுப்பிவிடுகிறோம்… வரும்வரை காத்திருக்கவும் என்று அனுப்பி வைத்தனர்….

ஆஃபிசை விட்டு திருப்தியாக வெளிவந்தவனின் மனதில் மீண்டும் அந்த தேவதை வந்து ஆட்கொண்டாள்…. “அவள் இந்த சென்னை சிட்டியில் எங்கே இருக்கிறாளோ…? நான் எங்கே போய் அவளைத் தேடுவேன்… அவள் எனக்கானவள் என்றால் கண்டிப்பாக அடுத்த முறை என் கண்ணில் படுவாள்… அதுவரை காத்திருப்போம் என நினைத்துக் கொண்டவன் பைக்கை உதைத்து பறக்கவிட்டன்…  

வீட்டிற்குச் செல்லலாமா…. என யோசித்தவன் அந்த முடிவை கைவிட்டு… மாணிக்கம் காம்ப்ளக்சில் வண்டியை நிப்பாட்டியவனுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்.

அவள் நின்றிருந்தாள், அந்த தேவதை கூடவே இன்னொருவனும்… குறுந்தாடி வைத்துக் கொண்டு கண்களில் கூலிங் கிளாஸ் அனிந்திருந்தான்… வெள்ளை நிற டீசர்டும் கருநிற ஜீன்சும் அனிந்திருந்தான் அவன்…

“ஏய்… இங்க பாரு…. உனக்கு எத்தனை தடவ சொல்றது…. ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாதா….? ஏன் இப்படி என் பின்னாடியே சுத்திட்டு இருக்க… உனக்கு வேற வேலையே இல்லையா…..”

“என் வேலையே இதாங்க…..”என கிரீட்டிங் கார்டுடன் ஒரு ரோஸையும் வைத்து அவளிடம் நீட்ட….

“ஏய்…. இங்க பாரு…. இதெல்லாம் சரி இல்ல…. என் பின்னாடி சுத்தாத… யாராவது பார்த்தா தப்பா நினைச்சுப்பாங்க….”

“ஹா..ஹா…. அதைப்பத்தி எனக்கு கவலை இல்லை…… நெனச்சா நெனச்சுட்டு போறாங்க…. கேட்டா… என்னோட பாய் ஃப்ரெண்டு னு சொல்லு..” என வெட்கமே இல்லாமல் அந்தப் பையனும் இளித்துக் கொண்டு நிற்க

“நான் சொல்றதை நல்லா கேளு…. ஆல்ரெடி எனக்கு ஆள் இருக்கு….. இப்ப என் பாய் ஃப்ரெண்டை கூப்பிடனுமா…?” என எச்சரிக்கை குரலில் சொல்ல…

அவன் வடிவேல் காமெடியை கண்டவன் மாதிரி கனைக்க ஆரம்பித்தான்…

“ஹா…ஹா…ஹா…ஹா….”

இனி இவனிடம் பேசி பயனில்லை… என நினைத்தவள் அந்த இடத்தைவிட்டு நகர எத்தனிக்க… அவன் வழிவிடாமல் மரித்துக் கொண்டு நின்றான்….

இதுவரை அமைதியாக அவர்களின் உரையாடலை அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தவன்…… பைக்கை ஸ்டான்டிட்டு வேகமாக அவர்களை நெருங்கினான்….

“ஏய்…. இங்க என்ன பிரச்சனை…… ஏய்… நீ வழிவிடு….” என அந்த இளைஞனின் சட்டையை பிடிக்க…. உடனே கார்த்திக்கின் கையை தட்டிவிட்டவன்….

“முதல்ல…. நீ யாருடா…. பிரச்சனை எங்க ரெண்டு பேருக்கும்தான் இடைல நீ எதுக்குடா…. வர்ற….. நீ என்ன ஹீரோவா…”என கார்த்திக்கை பார்த்து அவன் கேள்வி கேட்க….. அதற்கு கார்த்திக் பதிலளிக்கும் முன்….

“அவர்தான் என்னோட பாஃய் ஃப்ரெண்ட்…..”என அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் அந்த தேவதை…

அவள் சொன்ன வார்த்தைகளை புரிந்துகொள்ள ஓரிரு நொடிகள் ஆனது….. அந்த வார்த்தைகள் அவனது மூளையைச் சென்று தாக்க, மேலிருந்தபடி மன்மதன்(cupid) கார்த்திக்கின் இதயத்தை நோக்கி அம்பு எய்தான்… அந்த மன்மத அம்பு சரியாக கார்த்திக்கின் இதயத்தை சென்று தாக்கியது…


Comments

Popular posts from this blog

தி ப்ரேகப் (The Breakup)

அவள் ஒரு தேவதை-6

ஓடிப்போலாமா….?---24-இறுதிப் பதிவு