நானும் வருவேன்....
கைலாஷ் ஆட்டோவில் இருந்து இறங்க அவனைத் தொடர்ந்து அவனது காதல் மனைவி வைஷ்னவி இறங்கினாள்... தன் கணவனின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டவள் அவன் தோளில் சாய்ந்து கொள்ள... அவர்களைத் தொடர்ந்து கைலாஷின் அம்மா கனகம் இறங்கிக் கொள்ள... மூவரும் ஒன்றாக அந்த பிரபல மருத்துவமைக்குள் நுழைந்தனர்..
காதல் தம்பதிகளுக்கு மணமாகி ஆறுமாதங்களே ஆன நிலையில்.. வைஷ்னவி கர்ப்பம் தரிக்க.. அடிக்கடி மயக்கம், மூக்கில் இருந்து இரத்தம் வடிதல் போன்றவை ஏற்பட.. பதறிய கணவனை
"அதெல்லாம் ஒன்னுமில்ல.. பயப்படாதீங்க.."என சமாதானப் படுத்துவாள்... ஆனால் அவளது சமாதானமெல்லாம் ஒரு அளவிற்கு மேல் எடுபடவில்லை... தன் மனைவியை கட்டாயப் படுத்தி மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தான் கைலாஷ்...
இப்பொழுது மூவரும் டாக்டரின் முன்னே அமர்ந்திருக்க... வழக்கமான கேள்விகளை கேட்டு பதில்களை பெற்ற டாக்டர்.... ஒரு ஸ்கேன் எடுத்து பார்த்துவிடலாம் எனச் சொல்ல... கைலாஷ் ஆமோதிக்க... அடுத்த அறைமணி நேரத்தில்
கைலாஷ் மட்டும் டாக்டரின் முன்னே அமர்ந்திருக்க... மெதுவாக பேச்சை ஆரம்பித்தார் டாக்டர்...
"ஸ்கேன் எடுத்து பார்த்ததுல உங்க மனைவிக்கு ஹார்ட்ல பிராப்ளம் இருக்குறது தெரிய வந்திருக்கு...."
"என்ன டாக்டர் சொல்றீங்க...?" பதறினான் கைலாஷ்...
"எஸ்... உங்க மனைவி ஹார்ட்ல ஓட்டை இருக்கு.... உடனே ஆப்பரேசன் பன்னியாகனும்... இல்லேன்னா... அவங்க உயிருக்கு உத்திரவாதம் இல்லை..."
டாக்டர் சொன்னவற்றைக் கேட்ட கைலாஷ் தனது உயிரையே உருவி எடுத்ததுபோல் துடித்துப் போனான்... கண்ணில் பொல பொல வென கண்ணீர் வழிந்து கண்ணம் வழியே வழிந்தோடியது..
"இப்ப உங்க மனைவி ரொம்ப வீக்கா வேற இருக்காங்க... ஒரு ரெண்டு நாள் கழிச்சி... நல்லா ரெஸ்ட் எடுக்க வச்சி கூட்டிட்டு வாங்க..."
டாக்டரின் அறையைவிட்டு கனத்த மனதுடன் வெளியே வந்தவன்... தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு தன் முகத்தில் செயற்கையாய் ஒட்ட வைத்த புன்னகையுடன் தன் தாயையும் தாரத்தையும் நெருங்கினான்...
"கைலாஷ் டாக்டர் என்ன சொன்னாங்க..." என தாய் வினவ...
"ஒன்னும் பிராப்ளம் இல்லைம்மா... வைஷு ரொம்ப வீக்கா இருக்காளாம் ரெண்டு நாள் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு திரும்பவும் செக்கப்புக்கு வரச் சொன்னாங்க..."
அன்று நல்லிரவு ஒரு மணி....
"வைஷூ..." என அலறியபடி கண் விழித்தான் கைலாஷ்..
என்னங்க என்னாச்சு.... பதறினாள் வைஷு...
தன் மனைவியின் குரல் கேட்டு... நிம்மதியடைந்தவன்.... அவளை இருக்கி அனைத்தான்....
"என்னங்க என்னாச்சு.... ஏன் இப்படி...."
"ஒரு கெட்ட கனவு வைஷு...."
"ஓஹ்.. கனவா.. இதுக்கா இப்படி கத்துறீங்க..."
"வைஷு...வைஷு.... என்னைவிட்டு போய்ட மாட்டேல்ல.... ப்ளீஸ் வைஷு... நீ எனக்கு எப்பவுமே வேணும் வைஷு.... ப்ளீஸ்.. என்னைவிட்டு போய்ட மாட்டேல்ல..." அறற்றினான் கணவன்...
"அய்யோ... என்னங்க இது.. உங்களைவிட்டு நான் எங்கேயும் போகமாடேன்.... என் செல்லக் கண்ணனைவிட்டு என்னால் எப்படி பிரிய முடியும்.... உங்களைவிட்டு நான் பிரிஞ்சு இருப்பேன்னா அது சாவாலதான்...." எனச் சொல்லி வாய மூடவில்லை...
கைலாஷின் கைகள் வைஷ்ணவியின் வாயைப் பொத்தியது.... "வேண்டாம்..." என்பது போல் தலையாட்டினான் கைலாஷ்... கண்களில் நீர் எட்டிப் பார்க்க... முகம் வேதணையை தத்தெடுத்திருந்தது... அதற்கு மேல் அவனால் கட்டுப் படுத்த முடியவில்லை... அவளது மடியில் படுத்துக் கொண்டு முகத்தைப் புதைத்து ஓவென அழ ஆரம்பித்திருந்தான்.....
"அய்யோ... என்னங்க இது சின்னக் குழந்தையாட்டம் அழுதுக்கிட்டு... ப்ளீஸ் கைலாஷ்... என் செல்லம்ல.. என் செல்லக் கண்ணன் எப்பவுமே அழக் கூடாது... ப்ளீஸ்.. கண்ணை தொடைச்சுக்கோங்க..." என்றவாறே அவனது கண்ணீரை சேலைத் தலைப்பால் துடைத்தவள்.. அவனது நெற்றியில் ஆறுதலாக தன் உதட்டை ஒற்றி எடுத்தாள்...
அடுத்த நாள் காலை.... கிணற்றடியில் நின்றிருந்த வைஷ்னவிக்கு தலை கிர்ரென சுற்றிக் கொண்டு வர... மயங்கிச் சரிந்தாள்... கையில் இருந்து விடுபட்ட வாலி கிணற்றில் தொம்மென்று சத்தம் எழுப்ப... வீட்டிற்குள் இருந்து வெளிபட்ட கணவன்... வைஷ்னவியின் நிலைக் கண்டு பதறிப் போனான்.. மயக்கத்தில் கிடந்தவளை கைகளில் அள்ளிக் கொண்டு உள்ளே ஓடினான்...
மருத்துவமனை...
"உடனே ஆப்பரேசன் பன்னியாகனும்.... ரிசப்சன்ல பில் பே பன்னிடுங்க..."
ரிசப்சனில் நீட்டப் பட்ட பில்லைக் கண்டவன்... உடைந்து போனான்... இரண்டரை இலட்சமா...? இரண்டரை இலட்சத்திற்க்கு இப்ப நான் என்ன செய்வேன்...? எங்கே போவேன்... ?பொத்தென்று சேரில் அமர்ந்து கொண்டான்...
இரண்டு நாட்களுக்கு முன்னர் 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் செல்லாது என அறிவிக்கப் பட்ட நிலையில்... பணத்திற்கு என்ன செய்வது என திண்டாடிப் போனான் கைலாஷ்... இப்பொழுது என்ன செய்வேன்... என் வைஷு... என் வைஷுவை உயிரைக் கொடுத்தாவது காப்பாத்துவேன்.... சேரில் இருந்து எழுந்து கொண்டான்...
தனது செல் பேசியை எடுத்து அவனது நண்பர்களுக்கு கால் செய்ய ஆரம்பித்தான்...
அடுத்த ஒரு மணி நேரத்தில் அவனிடம் இரண்டு இலட்சம் சேர்ந்திருந்தது.... அவனுடைய நண்பன் குமார் பிளாட் வாங்குவதற்க்காக பேங்கில் இருந்து எடுத்து வைத்திருந்த பணம்.... ஆனால் இப்பொழுது அது யூஸ்லெஸ்.... செல்லாது என அறிவிக்கப் பட்ட பணம்... கடந்த இரண்டு நாட்களாக பேங்க் செயல்படாது என அறிவிக்கப் பட்ட நிலையில் இன்றுதான் மீண்டும் பேங்க் திறக்கப் பட்டது... பணத்தை மாற்ற வேண்டும் என்றால் நான்காயிரம் மட்டுமே ஒரு நாளில் மாற்ற முடியும்... வாரத்திற்கு பத்தாயிரம் மட்டுமே மாற்ற முடியும்... இரண்டு லட்சத்தை மாற்றவேண்டும் என்றால்..?
எதற்க்கும் மருத்துவமனையில் சென்று கொடுத்து பார்க்கலாம்... மீதி ஐம்பதாயிரத்தை பிறகு கொடுத்துக் கொள்ளலாம் என எண்ணியவன் குமாரோடு பைக்கில் மருத்துவமனை நோக்கி பறந்தான்....
"இல்லை... இல்லை... நாங்க பழைய 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வாங்குவதாக இல்லை.. அதுவும் முழுதாக பில் செட்டில் செய்ய வேண்டும் அப்பொழுதுதான் வேலை நடக்கும்" என மறுத்துவிட..
கைலாஷால் என்ன செய்வது என்று தெரியவில்லை... பொத்தென்று கீழே விழ இருந்தவனை.. தாங்கி பிடித்தான் குமார்....
அடுத்த அரைமணி நேரத்தில் குமார்.... தான் அறிந்த... தெரிந்த நபர்களை பேங்கிற்கு அழைத்து வந்திருந்தான்.... மாப்ள... கவலைப்படாத நான் ஒரு 25 ஆட்களை கூட்டி வந்திருக்கேன்... பணத்தை மாத்திடலாம்... வைஷ்ணவிக்கு ஒன்னும் ஆகாது.... ஆப்பரேசன் நல்லபடியா முடியும்... இன்னும் ஒரு வாரத்துல வைஷ்ணவி ஆரோக்கியமா... எழுந்து நடமாட ஆரம்பிச்சுடுவா பாரேன்... என நம்பிக்கை அளித்த நண்பனை கட்டி அனைத்து தன் நன்றியை தெரிவித்தான்...
பேங்கில் கூட்டம் அலைமோதியது....அந்த கூட்டத்தில் தவறி கீழே விழுந்தால் போதும்.. மிதித்தே கொன்றுவிடுவார்கள் போல அப்படி ஒரு நெரிசல்... அலையலையாய் ஏழை மக்களின் கூட்டம்... பணக்காரர்களில் ஒரு தலையைக் கூட காணமுடியவில்லை... வரிசையில் நின்ற அனைவரும் பம்பையும் பரட்டையுமாய் நின்றிருந்தனர்...
அந்த கூட்டத்தைக் கண்டு கைலாஷ் மலைத்துப் போய் நின்றிருந்தான்...
அரைமணி ஒருமணி நேரமானது.... ஒருமணி இரண்டு மணி நேரமானது... கைலாஷின் கோட்டா வரும் தருணம் கேஷியர்... கவுண்டரை சாத்தினான்...
பணம் முடிந்துவிட்டது....
ஆனால் வங்கியின் பின் ஜன்னல் வழியே கட்டுக் கட்டாக பணம் பறிமாறிக் கொள்ளப்பட்டது....
கைலாஷின் நம்பிக்கை உடைந்து போன கண்ணாடிச் சில்லாய் சிதறியது.... ஓரமாய் வந்தவன்... முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தான்...
"என்... வைஷு...என் வைஷு.... எனக்கு வேணுமே.... நான் இப்ப என்ன பன்னுவேன்...." கண்ணீர் துளிகள் வற்றிப் போய் இருக்க, மணித்துளிகளும் கரைந்து கொண்டு இருந்தது...
குமார் அவனுக்கு ஆறுதல் சொல்லக் கூட முடியாமல் அவனும் உடைந்து போய் இருந்தான்...
அப்பொழுதுதான் குமாருக்கு அந்த யோசனை வந்தது...
"டேய்... மாப்ள... ஹாஸ்பிட்டல்ல... ஏ.டி.எம் கார்ட் அக்சப்ட் பன்னுவாங்கல்ல..."என கேட்டவனிடம் விரக்தியாகச் சிரித்தான் கைலாஷ்...
"எ.டி.எம் ல பத்தாயிரம்தான் மாப்ள இருக்கு...."
கைலாஷின் பதில் குமாருக்கு ஏமாற்றத்தை அளித்தது.... தன் தலையைக் கீறி யோசித்தான்... ஐந்து நிமிட யோசிப்பின் பிறகு ஒரு யோசனை கிட்டியது... வேகமாக கைலாஷின் கையை பிடித்து இழுத்துச் சென்று பைக்கை பறக்க விட்டான்...
மணி மாலை நான்கு... பிரபல ஆளுங்கட்சி அமைச்சரின் வீடு....
பல தடைகளை தாண்டி... அந்த அமைச்சரை சந்தித்தனர்..
"என்ன குமார்... திடீர்னு இந்த பக்கம்....." கண்களில் ஆச்சரியத்தோடு அமைச்சர்..
அறிமுகப் படுத்திக்க நேரமில்லை என்பதை உணர்ந்த கைலாஷ்...
"சார்.... சார்... சார்.... ப்ளீஸ்.. சார்... என் மனைவி ஹாஸ்பிட்டல்ல உயிருக்கு போராடிட்டு இருக்கா சார்... தயவு செய்து... இல்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க...சார்..."
அவர் அமைதியாக கைலாஷை பார்க்க... இப்பொழுது குமார் அவரிடம் கெஞ்சினான்... "சார்.. இது ஒரு உயிர் சம்பத்தபட்ட பிரச்சனை சார்... ப்ளீஸ் சார்... உதவி பன்னுங்க...சார்"
"உங்களுக்கு கொடுத்தால் உங்களை மாதிரி எல்லாருக்கும் கொடுக்கவேண்டி இருக்குமே.... மேலும் பணம் எப்படி வந்துச்சுன்னு கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க..."
"அதை நான் பார்த்துக்கிறோம்... சார்.... தயவு செய்து முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க... நான் உங்க கால்ல வேண்ணா விழுறேன்...." பொத்தென்று அவரது காலில் விழுந்தான் கைலாஷ்....
அந்த அமைச்சரின் கல் நெஞ்சம் அசைந்தது....
"தம்பி நான் பணம் கொடுக்கிறேன்.. ஆனால் இதை யார்கிட்டேயும் நீங்க ரெண்டு பேரும் மூச்சு விடக்கூடாது..." என்றவாறே உள்ளறை நோக்கி நடக்க இருவரும் பின்னே நடக்க...
இருவரும் பின் தொடர்ந்தனர்... அது ஒரு மினி குடோன் போல இருந்தது... மறைத்துவைக்கப்பட்டிருந்த கதவியின் வழியே அவர் உள்ளே நுழைந்து மேஜையில் மேல் துணியால் போர்த்தப் பட்டிருந்த அந்த அட்டை பெட்டியை துணியைவிட்டு விலக்கினார்....
வெளியே நின்றிருந்த... இருவரும் கண்களும் ஆச்சரியத்தில் விரிந்தது.... அவ்வளவும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள்... கட்டுக் கட்டுகளாய் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது....
பின்னே திரும்பியவர்... கைலாஷிடம் கேட்டார்.... "தம்பி எவ்ளோ வேணும்னு கேட்ட..."
அவன் பதில் சொல்லும் முன் அவனது போன் ஒலித்தது....
மருத்துவமனை....
இதயம் சுறுக் சுறுக் கென்று தைத்தது.... வைஷ்ணவியின் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக் கொண்டிருந்தது.... அவளது நிலைமை அவளுக்கு நன்று உரைத்தது.... இரவு அவளது கணவன் அழுது அரற்றியது ஞாபகத்திற்கு வந்தது.... பக்கத்தில் சோகமாக அமர்ந்திருந்த கனகத்தை அழைத்தாள்....
"அத்தை.... அ...அத்தை...."
"என்னம்மா... என்ன பன்னுது... டாக்டரை கூப்பிடவா..." பதறினார் கனகம்...
"வேணம்த்த.... எனக்கு.... எனக்கு... அவர்கிட்ட பேசனும்.... போன் போட்டு கொடுங்கத்தை..." குரல் வேதனையோடு ஒலிக்க... கனகம் தன் மகனுக்கு போன் போட்டு வைஷ்ணவியிடம் கொடுக்க...
இப்பொழுது கைலாஷின் போன் அடிக்க அவசரமாக எடுத்து காதில் பொருத்த......
மருமுனையில் இருந்து....
"ஐ... லவ்... யூ... கைலாஷ்...." அதற்குமேல் சத்தமில்லை....
உடனே பதறினான்.. கைலாஷ்...
"வைஷு....வைஷு... இருக்கேல்ல.... பேசும்மா... எனக்கு பயமா இருக்கும்மா..... இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல பணத்தோடு வந்திடுவேன் என் கண்மனி...கவலைப்..." என பேசிக் கொண்டே போக...
மறுமுனையில் கனகத்தின் கதறல் ஒலி கைலாஷின் செவியை வந்து அறைந்தது....
"இந்த பணமெல்லாம்....ஒரே நாள்ல எப்படி இங்க வந்துச்சுன்னுதானே... பக்குற குமார்... எனக்கு எல்லா இடத்துலயும் ஆட்கள் இருக்கு.... சிட்டில உள்ள எல்லா பேங்குகள்ளையும் மாத்தி கொண்டு வந்ததுதான் இந்த பணமெல்லாம்... என்னதான் புது புது சட்டம் கொண்டு வந்தாலும்... எங்களை எதுவும் செய்ய முடியாது...." என குமாரிடம் பெருமை அடித்துக் கொண்டிருந்தார்... அமைச்சார்....
அப்பொழுதுதான் அது நடந்தது..... ஒரு மனித உருவம் தன் உடம்பு முழுவதும் தீயை அப்பிக் கொண்டு அறைக்குள் ஓடிவந்து அந்த பணக்கட்டுகளின் மேல் வந்து விழுந்து புரண்டது....
தன் தாயின் கதறலில்.... நடப்பு புரிந்தது.. கைலாஷிர்கு... அழுகைக் கூட வரவில்லை.... ஆற்றாமையினால் ஆத்திரம் வந்தது... அடுக்கி வைக்கப் பட்டிருந்த பணக் கட்டுகளை பார்க்க பார்க்க... அவனுள் வெறி கொழுந்துவிட்டு எறிந்தது..
சுற்றுமுற்றும் பார்க்க.... குடோனின் வாசலருகே..... ஒரு பெற்றோல் கேன்... உடனே எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டு தன் சட்டைப் பையில் வைத்திருந்த... லைட்டரை எடுத்து பத்திக் கொண்டு அறையின் உள்ளே ஓடி பணக்கட்டின் மேல் புரண்டான்....
அந்த பணநாயகத்தோடு ஜனநாயகமும்.... அமைச்சரின் வயிறும்.... கைலாஷின் உயிரும் சேர்ந்து எறிந்துக் கொண்டிருந்தது...
முற்றும்.

Comments
Post a Comment
உங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள்